இந்தியா – நியூசிலாந்து தொடரை முன்னிட்டு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டம் குறித்து வெளிப்படையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியபோது, “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்த ஜடேஜா தனது ஆட்டத்தில் புதுமைகளை கொண்டு வர வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். ஆனால் அதை அவர் பெரிதாகக் கவனிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “பல ஆண்டுகளாக ஜடேஜா அடைந்த வெற்றிகளே இந்த பிடிவாதத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை செய்யாவிட்டால், போட்டி கிரிக்கெட்டில் முன்னணியில் நீடிப்பது கடினம்” எனவும் கூறினார்.
விராட் கோலி குறித்து பேசுகையில், “கோலி எப்போதும் தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஃபிட்னஸ், ஷாட் தேர்வு, மனநிலை என அனைத்திலும் அவர் புதுமைகளை புகுத்துகிறார். ஜடேஜா கோலியைப் பார்த்தாவது கற்று, தனது வெள்ளைப்பந்து ஆட்டத்தில் புதிய பரிமாணங்களை சேர்க்க வேண்டும்” என்று அஸ்வின் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா, வரும் போட்டிகளில் தனது ஆட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவாரா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

